சுயமரியாதைத் திருமணம் என்பது அறிவுக்கு ஒவ்வாத மதம் சார்ந்த மூடச் சடங்குகளைத் தவிர்த்து, புரோகிதத்தை மறுத்து, அறிவியல் பூர்வமாக, அறிவுப்பூர்வமாக, சிக்கனமாக செய்யப்படும் திருமணம் ஆகும். 'வாழ்க்கையில் பிரவேசிக்க வயது வந்த ஓர் ஆணும், பெண்ணும் செய்துகொள்ளும் ஒப்பந்தம்' என்று எளிமையாக இதற்கு விளக்கம் சொன்னார் தந்தை பெரியார்.
மதம் சார்ந்த, குறிப்பாக இந்துமதத் திருமண முறைகள் பெண்களை அடிமையாக்கும் சடங்குகளையும், புரியாத வடமொழியில் இழிவுபடுத்தும் மந்திரங்களையும் கொண்டதாகவும், தேவையற்ற பொருளாதார வீணடிப்பைச் செய்வதாகவும் உள்ளன. எனவே சிக்கனமாக எளிமையாக நம் தாய்மொழியில் உறுதிமொழி கூறி செய்துகொள்ளும் முறையே இந்தத் திருமணம்.
பொன்விழாவை நெருங்கிக் கொண்டிருக்கும், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் கடந்த காலங்களில் ஏராளமான ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்தியுள்ளது. இன்றைய சூழலில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், அதன் தேவை கருதி, "மன்றல்" எனும் பெயரில் ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழாவை, கடந்த 2012 முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வருகிற 28-08-2022 அன்று காலை திருச்சி பெரியார் மாளிகையில் "மன்றல்" நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.